பாடல்: சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
படம்: சந்திரோதயம்
பாடலாசிரியர்: வாலி
இசை: எம் எஸ் வி
மிகவும் சாதாரணமான, சுவாரஸ்யமற்ற கதையைக் கொண்ட இப்படத்துக்கு முத்து முத்தான பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை அனைத்துக்கும் சத்தான இசையை ஊட்டி, உலவ விட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர்.
இது ஒரு வழக்கமான காதல் டூயட்தான் என்றாலும், இதை ஒரு சிற்பம்போல் மிக அழகாகச் செதுக்கியிருக்கிறார் வாலி.
இந்தப் பாடலில் நாயகன் பாடும் வரிகள் வழக்கமானவைதான். ஆனால் நாயகியின் வரிகளில்தான் வைரங்களைப் புதைதிருக்கிறார் இந்த வித்தகக் கவிஞர். ஒரே பாடலில் எத்தனை உவமைகள்1 இத்தனை உவமைகள் நிறைந்த பாடல் வேறொன்று இருக்குமா ('அத்திக்காய்' நீங்கலாக) என்பது சந்தேகம்தான்!
இசை பற்றிப் பேசும் அறிவு எனக்கு இல்லை என்பதால், இசையின் சிறப்புகளைப்பற்றி அதிகம் குறிப்பிடப் போவதில்லை. ஆயினும் என் பாமர அறிவுக்குப் புலப்பட்ட ஓரிரு கருத்துக்களை மட்டும் குறிப்பிட விழைகிறேன். இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்க்கிறார் எம் எஸ் வி என்று தோன்றுகிறது - பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக்கருவிகள் தடங்கலாக இருக்கக்கூடாது என்பதாலோ என்னவோ!
மிக எளிமையான் துவக்க இசை. கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது.) ஒரு பிரம்மாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல, மென்மையாக ஆர்ப்பட்டமில்லாமல் இசைத்துவிட்டுப் போகிறது துவக்க இசை.
கேட்டவுடனேயே மயங்க வைக்கும் இனிமையான் பல்லவியை டி எம் எஸ் துவங்கி வைக்கிறார். பல்லவியிலேயே மூன்று உவமைகளைத் தாராளமாக, அநாயாசமாக, 'இந்தா எடுத்துக்கொள்' என்பதுபோல், எடுத்து வீசியிருக்கிறார் கவிஞர் வாலி.
சந்த்ரோதயம் ஓரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
(சந்த்ரோதயம்)
அடுத்து நாயகி தன்னைப் பற்றிப் பேசுகிறாள். நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?
குளிர்காற்று கிள்ளாத மலர்
கிளி வந்து கொத்தாத கனி
நிழல்மேகம் தழுவாத நிலவு
வியப்பாக இருக்கிறதா? ஆயினும் என்ன? இப்படிப்பட்டவளை நீ உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டாயே!
இந்த வரிகளில் நாயகியின் பெருமை தெரிகிறது. 'எப்படிப்பட்ட தூய்மையான பொருளை நீ அடைந்திருக்கிறாய் என்பதை நீ உணர வேண்டும்' என்று நாயகனுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன இவ்வரிகள்.
'இப்படி என்னைத் தூய்மையாக வைத்துக் கொண்டதெல்லாம் நீ உன் நெஞ்சுடன் என்னை இணைத்துக் கொள்ளத்தானா?' என்ற (போலியான) ஆதங்கமும் இவ்வரிகளில் ஒலிக்கிறது.
இவ்வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள முடியும்.
குளிர் காற்று கிள்ளாத (என்ன அருமையான சொல்! குளிர் காற்று உடலில் படும்போது ஏற்படும் சிலிர்ப்பை 'கிள்ளல்' என்று வர்ணித்திருக்கிறார் கவிஞர். ஆங்கிலத்தில் 'tickling sensation' என்று சொல்லலாமோ?) மலர், கிளி வந்து கொத்தாத கனி, நிழல் மேகம் தழுவாத நிலவு இவை எல்லாம் இயற்கையில் இருக்க முடியாதே? அப்படியானால் நான் மட்டும் எப்படி? நீ என்னை உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டதால் வேறு எந்த விதத் தீண்டல்களும் எனக்கு ஏற்படவில்லை!
குளிர்காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ
இதைத் தொடர்ந்து, நாயகி நாயகனை வர்ணிக்கும் பல்லவி
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
பாடல் இன்னும் பாதி கூட முடியவில்லை. அதற்குள் பன்னிரண்டு உவமைகளை அள்ளித் தெளித்து விட்டார் இரண்டாம் கம்பன்! உவமைக் கவிஞர் என்ற பட்டம் இவருக்கும் பொருந்தும் - இந்த ஒரு பாடலுக்காகவே! இளம் சூரியன் உந்தன் வடிவம், செவ்வானம் உந்தன் நிறம் என்பதெல்லாம் வழக்கமான (ஆயினும் சிறப்பான) வர்ணனைகள். (எம்ஜியாரின் தோற்றத்துக்கும் அவருடைய அன்றைய அரசியல் சார்புக்கும் கூடப் பொருந்துபவைதான்.)
ஆனால் 'பொன்மாளிகை உந்தன் மனமானதோ' என்ற வரியில் ஒரு பொடியை (பொறியை) வைத்திருக்கிறார் கவிஞர், 'என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ' என்ற அடுத்த வரியின் மூலம். 'நீ பொன்மனச் செம்மல்தான். ஆனால் அது எதனால்? என் காதல் உன் மனதில் உயிர் வாழ்கிறதே அதனால்தான். என் காதல்தான் பொன். அது உன் மனதில் இருப்பதால்தான் அது பொன் மாளிகை!'
மீண்டும் பல்லவியின் இரு வரிகளைப் பாடுகிறார் நாயகி.
(இளம் சூரியன்)
இந்த இடத்தில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது ஒரு நீளமான பாடல். இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்!
ஆஹாஹாஹா.......
என்ன ஒரு ஹம்மிங் (இதற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)
இந்த ஹம்மிங்கைக் கேட்கும்போது எனக்கு வேறு இரண்டு ஹம்மிங்குகள் நினைவுக்கு வருகின்றன. மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, எனக்குத்தோன்றிய உணர்வு இது. இசை வல்லுநர்கள் எப்படிப் பார்ப்பார்களோ தெரியாது!
இந்தப் பாடலின் ஹம்மிங், காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கிறாள்.
'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலில் வரும் ஹம்மிங், ஒரு இன்பக் கடலில் மூழ்கி மூழ்கி எழும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த நாயகியின் காதல் உறுதியாகி விட்ட ஒன்று.
'யாருக்கு மாப்பிள்ளை யாரோ'வில் வரும் ஹம்மிங் நாயகியின் உல்லாசமான, குறும்புத்தனமான, சீண்டிப் பார்க்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், 'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய...' என்ற சரம ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்!
மீன்டும் நாயகன் பாடும் சரணம்.
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிகொண்ட சிலையல்லவோ
(சந்த்ரோதயம்)
இப்போது கவிஞர் விஸ்வரூபம் எடுக்கிறார்- இவ்வளவு நேரம் சொன்னதெல்லம் மிகவும் சாதாரணம் என்பதுபோல.
நாயகி திருமணத்தை வெறுத்தவள். அவள் காதல் வயப்படும்போது, அந்த மாற்றம் படிப்படியாகத்தான் நிகழ வேண்டும். முதலில் தன்னைப் பற்றிக் கூறி விட்டுத் தான் நாயகனுக்கு ஏற்றவள்தான் என்ற கருத்தை முன் வைக்கிறாள். இப்போது நாயகன் அவளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்று தெரிந்ததும், அவனோடு தான் இணைய விரும்புவதைத் தெரிவிக்கிறாள். முதலில் உவைமைகளில் துவங்குகிறாள்.
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
உவைமைகளை அடுக்கிக் கொண்டே போவதில் கவிஞருக்கு எந்த ஒரு சிரமும் இருப்பதாகத் தெரியவில்லை.
எவ்வளவு நேரம்தான் மறைமுகமாகப் பேசிக் கொண்டிருப்பது? இதற்கு மேல் தயங்கக் கூடாது என்று முடிவு செய்து, அடுத்த வரியில் தன் விருப்பத்தை நேரடியாகவே சொல்லி விடுகிறாள்.
துணையோடு சேராத இனம் இல்லையே!
இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பொருள்களைப்பற்றி. உயிர் இனங்களும் அப்படித்தான் என்று வலியுறுத்துவது போல், 'துணையோடு சேருவது எல்ல உயிரினங்களுக்கும் இயல்பான ஒன்றுதான். எனவே என் மனதைப் புரிந்து கொள்' என்ற செய்தியைச் சொல்லி முடிக்கிறாள்.
இப்போதுதான் நாயகிக்குத்த் தான் செய்த தவறு உரைக்கிறது. 'நான் சொன்ன உவமைகள் எல்லாம் சரிதானா? ஏதோ ஒன்று உதைக்கிற மாதிரி இருக்கிறதே! ஆமாம். நான் முதலில் சொன்ன மூன்று உவமைகளுக்கும், கடைசியாகச் சொன்ன உவமைக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கிறதே!'
அலையும் கடலும் ஒன்றுதான்.
உடலோடு பிறந்ததுதான் நிழல்.
இமையும் விழியும் எப்ப்பொதுமே இணைந்துதான் இருந்து வந்திருக்கின்றன.
ஆனல், உயிர் இனங்களில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனித்தனியே பிறந்து வளர்ந்து, பின்னே இணைகிறார்கள். இது எப்படி மற்ற உவமைகளுடன் பொருந்தும்?
இந்தமுரண்பாட்டைச் சரிக்கட்டுவதற்காக, நாயகி புத்திசாலித்தனமாக, அவசரமாக, அடுத்த வரியை அமைக்கிறாள்.
'என் மேனி உனதன்றி எனதில்லையே'
அதாவது, எப்படி அலை கடலுக்குச் சொந்தமோ, நிழல் எப்படி உடலுக்குச் சொந்தமோ, இமை எப்படிக் கண்களுக்குச் சொந்தமோ, அது போல் நான் உனக்குச் சொந்தம். எனவே கடைசியாக நான் சொன்னது ஒரு சம்பிரதாயமான உவமைதான். முதலில் சொன்ன மூன்று உவமைகள்தான் எனக்கும் உனக்கும் பொருந்தும்.
இந்த 'விளக்கத்தை' அவள் அவசரமாக வெளிப்படுத்துவது இசையிலும் பிரதிபலிக்கிறது. 'துணையோடு சேராத இனம் இல்லையே' என்ற வரியைத் தொடர்ந்து, ஒரு சிறு கால இடைவெளி கூட இல்லாமல், 'என் மேனி உனதன்றி எனதில்லையே' என்று வருவது சிறப்பு. எனினும், முதல் சரணத்திலும் இவ்வாறே வருவதால், இது தற்செயலாக அமைந்தது என்றுதான் கருத வேண்டும். ஒரு தெய்வீக இசை அமைப்பில், இது போன்ற 'தற்செயலான ஆச்சரியங்கள்' அமைவதில் வியப்பில்லை.
நாயகியின் இந்த வரிகளைக் கேட்டதும், நாயகனுக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. காதலியுடன் இணைவதை நினைத்து, நாயகன் பாடத் துவங்கி விடுகிறான்.
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடிமீது தலை வைத்து இளைப்பாரவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இவை பழைய (கிராமபோன்) இசைத்தட்டுக்களில் இடம் பெற்ற வரிகள். சென்சாரின் வலியுறுத்தலாலோ என்னவோ, திரையில், இந்தச் சரணம் முழுவதுமாக மாற்றப்பட்டது. வாலியின் கற்பனை, உச்சியில் பறந்த வேளையில் நமக்குக் கிடைத்தது ஒரு கூடுதலான சரணம்.
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
(சந்ரோதயம்)
பாடல் ஒரு சிறிய ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான் துவக்கம், முழுமையான ஆனந்ததில் முடிவதை ஹம்மிங்க மாறுபாடு உணர்த்துகிறது.
நாயகியின் சுய அறிமுகம், தன் விருப்பத்தை மெலிதாக வெளிப்படுத்துதல், நாயகனுடன் இணைதல் என்று மூன்று நிலைகளில் சரணங்களை அமைத்திருப்பது வாலியின் சிறப்பு.
பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான் பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும் மெல்லிசை மன்னர், இந்தப் பாடலில், நாயகன் நாயகி இருவருக்கும் ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்டபோதிலும்), இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணஙளை அமைத்திருப்பது புதுமை!
இந்தப் பாடலைக் கேட்கும்போது, இது காற்றினிலே வருக் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!
மெல்லிசை மன்னரின் மாணிக்கக் கற்கள் பதித்த வாலியின் வைர வரிகள் இதோ:
http://www.jointscene.com/php/play.php?songid_list=௧௩௨௯௬
நல்லிசை ரசிகன்
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக