ஞாயிறு, 3 ஜனவரி, 2010

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்

படம்: மணப்பந்தல் (1962)
கண்ணாதாசன் விஸ்வ‌நாதன் ‍ ராமமூர்த்தி

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)


மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

சிறு வயதிலேயே என்னை மிகவும் ஈர்த்த பாடல் இது. ஒரு குழந்தை அனைவைரையும் தன்னிடம் ஈர்ப்பது போல், இப்பாடலும் கேட்பவ‌ர் எல்லோரையும் உடனே ஈர்க்கும் வல்லமை (இனிமை) படைத்தது. இந்தப் பாட்டின் அழகே இதன் எளிமை தான். எளிமையான் பாடல் வரிகள், எளிமையான இசை. இந்தப் பாடலை யாருமே சுலபமாகப்ப் பாடி விடலாம். இந்த எளிமையே இந்தப் பாடலின் வலிமை என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒரு இளம்பெண் ஒரு பொம்மைக் குழந்தையிடம் (சிறுமியிடம்) தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தும் பாடல் இது.

இந்தப் பாடலின் வரிகளைக் கேட்கும்போது, எம் எஸ் வி பற்றி, வாலி சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
'என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப் போனாண்டி'
என்று வாலி எழுதியதை,
'போனவன் போனாண்டி'
என்று திருத்தித் தன் இசைக்கு ஏற்றபடி மாற்றியதுடன், பாடல் வரிகளுக்கும் அழகு சேர்த்தவர் மெல்லிசை மன்னர்.

இந்தப்பாட்டில் கூட முதலில் கவிஞர் 'உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்' என்று (மட்டும்) தான் எழுதி இருப்பாரோ? எம் எஸ் விதான் அதை 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்' என்று இரட்டிருத்திருபாரோ?' என்ற ஐயம் என் மனதில் எழுகிறது!

பல்லவியில் 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்' என்று வருவது போல், முதல் சரணத்தில் வார்தைகள் இரு முறை வருவது அழகு. இரண்டாவது சரண‌த்தில் இதைத் தவிர்த்திருப்பது இன்னொரு அழகு. இரண்டாம் சரனத்திலும் வார்த்தைகள் இரு முறை வந்திருந்தால், கேட்பவற்குச் சற்றுச் சலிப்புத் தட்டியிருக்கக்க் கூடும்.

இந்த எளிய பாடலிலும் இலக்கிய நயத்தை உள்ளடக்க மறக்கவில்லை கவிஞர். காதலன் வாசலுக்கு வந்த பிற‌குதான் பூமுடித்துப் பொட்டு வைத்தாளாம் இந்த நங்கை. பொதுவாக, தலைவனுக்காகத் தலைவி, தலை சீவிப் பூ முடித்துப் பொட்டிட்டுக் காத்திருப்பதுதானே மரபு? ஆனால் இந்த நங்கை, தலைவனின் தலையைக் கண்ட பிற‌குதான் பூ முடித்துப் பொட்டு வைக்கிறாள் என்றால், என்ன காரணம்? முன்பே வைத்திருந்தால், பூ சற்றே வாடியிருக்கும், பொட்டு சற்றே கலைந்திருக்கும் என்ற அச்சத்தால் இருக்குமோ? தன் காதலனைப் புதுப் பொலிவு மாறாமல் எதிர் கொள்ள விழைகிறாள் போலும்!

முதல் சரண‌த்தின் இடையே ஒரு அழகான ஹம்மிங் வருகிறது. 'ஓஓஓஒஓஓ.......' என்று.
ஹம்மிங்கில் இவ்வளவு வகைகள் வேறு எந்த இசை அமைப்பாளராவது முயன்று பார்த்திருப்பாரா?

இரண்டாவது சரண‌த்தில், இதே ஹம்மிங் இசைக்கருவியில் இசைக்கப் படுகிறது.
'அவர் மார்பினிலே காலனமெல்லாம் நடனமாடுவேன்' என்ற வரிக்குப் பிறகு, ஒரு ரம்மியமான நடன இசையாக ஒலிக்கிறது
.'டண்டண்டண்டமண் டடடண்டண்.....'

ஒரு சிறு குழந்தை நம் மார்பில் குதிப்பது போன்ற இனிமையை வெலிப்படுத்தும் இசை. (குழந்தைதானே மார்பில் நடன‌மாட முடியும்?) ஒரு வேளை, இந்த நடன இசையை இங்கே போட்ட பிற‌குதான், இதற்கு இணையாக முதல் சரனணத்தில் ஹம்மிஙகை அமைத்திருப்பாரோ?

ஆர்ப்பாட்டம் இல்லாத, ம‌னதை வருடிக் கொடுக்கும் இனிய பாடல்.

கைபேசியின் அழைப்பொலியாக வைத்துக் கொள்ள மிகவும் பொருத்தமான பாடல்!

குறிப்பு: நான் சொன்னது எதுவும் உஙள் யாருக்கும் தெரியாத ரகசியம் இல்லை என்பதை அறிவேன்!

நல்லிசை ரசிகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக